தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு - முழு லிஸ்ட்!

 

தமிழகத்தில் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பிரதீப் யாதவ், தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அதுல் ஆனந்திற்குப் பதிலாக, நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, பிரதீப் யாதவ் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக அதுல் ஆனந்த் புதிய பொறுப்பை ஏற்கிறார். மேலும், தீரஜ்குமார் உயர்கல்வித் துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசின் செயலாளராக இருந்த காகர்லா உஷா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் பதவிக்கு, அதே துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த சுந்தரவல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறையிலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராகப் பொறுப்பு வகித்த நிர்மல் ராஜ், வள்ளாலாருக்குப் பதிலாகப் போக்குவரத்துத் துறையின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த உமாநாத், தற்போது தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராகப் பணியிட மாற்றம் பெற்றுள்ளார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராகச் சுப்ரியா சாஹூ பொறுப்பேற்கிறார்.

மின்சார வாரியத்திலும் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக அருண் ராய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மின் வாரியத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாகக் கல்லூரி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக ரத்னா நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.