undefined

ஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8,000 ஆக உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் ஆதரவற்ற விதவையர் சான்றிதழ் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வருமான வரம்பில் நீண்ட காலத்திற்குப் பிறகு அதிரடி மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமய மூர்த்தி வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, முந்தைய வரம்பு: 2006-ஆம் ஆண்டு முதல் மாதாந்திர வருமான உச்சவரம்பு ரூ.4,000 ஆக இருந்தது. தற்போது இது ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம், சொந்தத் தொழில் அல்லது இதர ஆதாரங்கள் என அனைத்தையும் சேர்த்து மாத வருமானம் 8,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கும், அதன் மூலம் சலுகைகளை அடைவதற்கும் சில முக்கிய நிபந்தனைகளை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கணவனை இழந்த பெண்கள் மட்டுமே இந்தப் பிரிவின் கீழ் வருவார்கள். நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றவர்கள் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறத் தகுதியற்றவர்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் பெண்களுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டில், 10 சதவீத இடங்கள் ஆதரவற்ற விதவைகளுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.

இந்த வருமான உச்சவரம்பு மாற்றங்கள் கடந்த காலங்களில் 1993ம் ஆண்டில் ரூ.1,000, 2006ம் ஆண்டில் ரூ.4,000 என இருந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வருமான வரம்பு உயர்வு மூலம், அதிகப்படியான பெண்கள் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறவும், அரசின் நலத்திட்ட உதவிகளை அடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.