தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ்-க்கு பணி நீட்டிப்பு - மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை!

 

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31, 2026 அன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு மேலும் சில மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கக் கோரித் தமிழக அரசு மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் பொறுப்பேற்ற புதிய அரசின் முக்கிய நிர்வாக நகர்வுகளுக்கு அவரது நீண்ட கால அனுபவம் தேவைப்படுவதால், இந்த அதிரடி முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

1990ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சாய் குமார், கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் பல்வேறு முக்கியத் துறைகளில் முத்திரையைப் பதித்த மூத்த நிர்வாகி. தனது ஆரம்பகாலப் பணிகளில் மதுரை மாநகராட்சி ஆணையராகவும், தருமபுரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றியதோடு, மின்சார வாரியத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

 முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் எனப் பல்வேறு உயர் பதவிகளை அவர் அலங்கரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஏப்ரல் 2026 இல் தமிழகத்தின் 33-வது தலைமைச் செயலாளராகச் சாய் குமார் நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மே மாதம் பொறுப்பேற்ற புதிய அரசு, மாநிலத்தின் மிக முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சாய் குமாரின் வழிகாட்டுதல் தொடர்ந்து தேவை என விரும்புகிறது.

அவரது நேர்மையான மற்றும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கோரித் தற்பொழுது மத்தியப் பணியாளர் நல அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அவர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகும் தமிழகத்தின் தலைமைச் செயலாளராகத் தொடர்வார்.