காந்தி ஜெயந்தி விடுமுறை விதிகளை மீறிய 63 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை - தமிழக அரசு அதிரடி!
தேசியத் தலைவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் தேசியத் பண்டிகை தினங்களில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டவிதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 63 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறைச் சட்டத்தின்படி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி உள்ளிட்ட அனைத்துத் தேசிய விடுமுறை தினங்களிலும் தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும்.
ஒருவேளை நிறுவனத்தின் அவசியத் தேவைக்காகத் தொழிலாளர்கள் அந்த நாளிலும் வேலை செய்ய நேரிட்டால், அதற்கு ஈடாக இரட்டிப்பு சம்பளம் அல்லது வேலை நாளுக்கு மாற்றாக வேறு ஒரு நாளில் விடுப்பு அளிக்கப்படுவது கட்டாயமாகும்.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போதே இந்த விதிகள்மீறல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்ட விதிகளைப் புறக்கணித்துத் தொழிலாளர்களுக்கு உரிய விடுமுறையோ அல்லது அதற்கான உரிய சலுகையோ வழங்காத அந்த 63 நிறுவனங்கள் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.