இன்றே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - தமிழக அரசின் உத்தரவால் மகிழ்ச்சி!

 

நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வாரத்திற்கு 5 நாள் வேலை நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 28 முதல் 30 ம் தேதி வரை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதால் வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை தொடர் விடுமுறைகளும் வருவதால் வங்கிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம்.

மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வங்கி முடக்கத்தைக் கருத்தில் கொண்டு இன்றே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைப் பின்பற்றி, தமிழக அரசின் நிதித்துறை செயலாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான சித்திக் அனைத்து முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, வாரியங்கள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களை உடனடியாகத் தயாரித்துச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் அனைத்துச் சம்பளக் கணக்கு அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இம்மாதத்திற்கான ஊதியம், தினக்கூலி மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களுக்கான மின்னணு தீர்வினை, மாத இறுதி நாளான செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பதிலாகச் செப்டம்பர் 25 ஆம் தேதியே (இன்றே) வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்கூட்டியே சம்பளம் கிடைக்கவுள்ள இந்த அதிரடி அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.