தமிழக அரசு புதிய திட்டம் - பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்புத் தன்னார்வ குழுக்கள் அமைப்பு!
பள்ளி மாணவர்களிடையே புகையிலை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தைத் முழுமையாகத் தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் தன்னார்வக் குழுக்கள் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் புகையிலை, பீடி, சிகரெட் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தீவிரமாகத் தடுக்கும் வகையில் இந்தக் குழுக்கள் பள்ளிகளில் செயல்படும்.
மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாகவும், அதேசமயம் ரகசியமாகவும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்காக பிரத்யேகமாக 'போதையில்லா தமிழ்நாடு' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியின் மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவோர் அல்லது விற்பனை செய்பவர்கள் குறித்த ரகசியத் தகவல்களை எளிதில் தெரிவிக்க முடியும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை கல்வி வட்டாரங்கள் மற்றும் பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.