"ஒலிம்பிக் வெற்றியாளர்களை உருவாக்க தமிழ்நாட்டில் உயர்திறன் மையம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் தொடக்க அமர்வில், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில் விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த தவெக அரசின் மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைச் சர்வதேச அளவிற்குத் தரம் உயர்த்தி, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல வைக்கும் நோக்கில் புதிய "ஒலிம்பிக் உயர்திறன் மையம்" அமைக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விளையாட்டுத் துறையில் தமிழக இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று ஆளுநர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு ஆற்றல் மையமாக நிலைநிறுத்த இந்த உயர்திறன் மையம் வழிவகை செய்யும். இங்கு சர்வதேசப் பயிற்சியாளர்கள் மூலம் வீரர்களுக்கு அதிநவீனப் பயிற்சிகள் வழங்கப்படும்.
விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: வீரர்களின் உடல் தகுதி, ஊட்டச்சத்து, மற்றும் செயல்திறனை மேம்படுத்த நவீன விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இமையத்தில் உள்வாங்கப்படும்.
அண்மையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மூலம் தமிழகத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பல்வேறு புதிய செயல்திட்டங்கள் மற்றும் கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிராந்திய விளையாட்டு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தவெக அரசின் இந்த புதிய "ஒலிம்பிக் உயர்திறன் மையம்" குறித்த அறிவிப்பு, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள திறமையான இளம் தடகள வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை வரும் 2028 மற்றும் 2032 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் சாதனையாளர்களாக உருவாக்குவதற்கு ஒரு பிரம்மாண்ட உந்துசக்தியாக அமையும் என விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.