தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 6) ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மழையுடன் இடி, மின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (நவம்பர் 7) தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று சில இடங்களில் மிதமான மழையுடன் இடி, மின்னல் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்