தமிழகத்தில் முதலீட்டு திட்டங்களுக்கு இனி 21 நாளில் அனுமதி! புதிய சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்
தமிழகத்தில் தொடங்கப்படும் முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என். அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், இந்தச் சட்டத்தின் கீழ் “தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த ஆணையத்துக்கு தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பார். தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு செயலாளர் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். மேலும், அரசால் நிர்ணயிக்கப்படும் வகையில் 20 பேர் வரை உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம்.
ரூ.200 கோடி அல்லது அதற்கு மேல் மூலதன முதலீடு செய்யப்படும் திட்டங்கள், 5 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர் வம்சாவளியினரின் முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை இந்த ஆணையம் கண்காணிக்கும்.
முதலீட்டு திட்டம் தொடங்குவதற்கு முன்பு முதல் உற்பத்தி அல்லது செயல்பாடு தொடங்கும் நிலை வரை அதன் முன்னேற்றத்தை ஆணையம் ஆய்வு செய்யும். தேவையான அனுமதிகள், சலுகைகள் மற்றும் பிற ஒப்புதல்களை உரிய காலத்தில் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடும் அதிகாரமும் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய மாற்றமாக, குறிப்பிட்ட தொழில் திட்டங்களுக்கான ஏதேனும் அனுமதிக்கு 21 நாட்களுக்கு மேல் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காலவரம்பே நிர்ணயிக்கப்படாமல் இருந்தாலோ, அந்த அனுமதிக்கான காலவரம்பு 21 நாட்களாகக் கருதப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஏற்கனவே 21 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த காலவரம்பே தொடரும். அரசு அறிவிக்கும் பொது மற்றும் உள்ளூர் விடுமுறைகள் இந்த 21 நாள் கணக்கில் சேர்க்கப்படாது.இந்த புதிய நடைமுறை மூலம் பெரிய முதலீட்டு திட்டங்களுக்கான அனுமதிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் வகையில் தமிழகத்தின் முதலீட்டு வசதி அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.