தமிழக அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன.

விண்ணப்பதாரர்கள் செவிலியர் பட்டயப் படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் முடித்து, தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

செப்டம்பர் 25, 2026-ன்படி விண்ணப்பதாரர்களின் வயது 50-க்குள் இருக்க வேண்டும். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.21,000 வழங்கப்படும். தகுதியானவர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

சென்னை - 512, சேலம் (ஆத்தூர்) - 231, திருச்சி - 205, திருவண்ணாமலை (செய்யாறு) - 197, கோயம்புத்தூர் - 193, திருவள்ளூர் (பூந்தமல்லி) - 178, கடலூர் - 172, ஈரோடு - 169, தஞ்சாவூர் - 166 ஆகிய காலி பணிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nhm.tn.gov.in முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலருக்கு செப்டம்பர் 25, 2026 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.