தமிழகமே எதிர்பார்ப்பு... சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கும் இன்று தண்டனை விவரம் அறிவிப்பு!

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், இன்று குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் 9 போலீசாருக்கும் தண்டனை விவரங்கள் வெளியாகின்றன.

ஜூன் 19, 2020 அன்று ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி தந்தை - மகனைப் போலீசார் அழைத்துச் சென்று விடிய விடியத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சிபிஐ நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் மீதும் கொலை வழக்கு (பிரிவு 302) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் "குற்றவாளிகள்" என நீதிபதி ஜி. முத்துக்குமரன் அதிரடித் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

குற்றவாளிகளின் உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று காலை 10:30 மணியளவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் அபராதத் தொகை குறித்தும் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம். முன்னதாகத் தீர்ப்பின் போது பேசிய நீதிபதி, "நாம் அடித்துப் பழகுவதற்கு இந்த அப்பாவும் மகனும் கிடைத்துள்ளனர்; இவர்களை வைத்துப் பயிற்சி எடுப்போம்" என்று போலீசார் தங்களுக்குள் பேசிக் கொண்டதாகச் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தார். இது காவல்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.