தமிழகமே எதிர்பார்ப்பு... கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் இன்று மதியம் 2.30 மணிக்கு தீர்ப்பு!

 

தமிழகத்தையே உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணை தொடங்கிய மிகக்குறுகிய காலத்திலேயே, 22-வது நாளில் கோவை மகிளா நீதிமன்றம் இன்று மார்ச் 7, சனிக்கிழமை தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு, கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில், 21 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த மூன்று பேர், கார் கதவைத் திறக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அவர்கள் மறுக்கவே, கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ஆண் நண்பரைத் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளனர். பின்னர், அந்த மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பீளமேடு போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் இருசக்கர வாகனப் பதிவு எண்ணை வைத்துத் தீவிர விசாரணை நடத்தி, 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தனர்:

சதீஷ் (எ) கருப்பசாமி (30) - சிவகங்கை மாவட்டம், கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21) - சதீஷின் தம்பி, குணா (எ) தவசி (20) - மதுரை கருப்பாயூரணி ஆகிய 3 பேரைக் கைது செய்ய முயன்றபோது, போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால், துடியலூர் அருகே போலீசார் இவர்களைக் காலில் சுட்டுப் பிடித்தனர் 

இந்த வழக்கின் விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. சுமார் 270 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த போலீசார், டி.என்.ஏ (DNA) பரிசோதனை முடிவுகள் மற்றும் 111 முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், தாய் மற்றும் மருத்துவர்கள் என மொத்தம் 112 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கிய நேரடி விசாரணை, விடுமுறை நாட்களையும் கடந்து மிகத் தீவிரமாக நடந்து, வெறும் 21 நாட்களில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூன்று பேரும் இன்று மதியம் பலத்த பாதுகாப்புடன் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். சரியாக மதியம் 2:30 மணிக்கு நீதிபதி சுந்தர்ராஜன் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.

சம்பவம் நடந்த 4 மாதங்களுக்குள்ளேயே தீர்ப்பு வழங்கப்படுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீதித்துறை காட்டும் வேகத்திற்கு ஒரு முக்கிய உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.