தமிழ்நாடு ₹3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் - தங்கம் தென்னரசு எச்சரிக்கை!
மக்களவையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா - 2026', அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், மாநில அரசு கனிம வளங்கள் மூலம் ஈட்டி வரும் வருவாய் முடக்கப்பட்டு, தமிழ்நாடு ஆண்டிற்குச் சுமார் ₹3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஜூலை மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது தனித்து வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு எனத் தெளிவாகத் தீர்ப்பளித்திருந்தது. ஒன்றிய அரசின் இப்புதிய மசோதா அந்தத் தீர்ப்பை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் உள்ளது.
மாநிலங்கள் தங்கள் சொந்த இயற்கை வளங்களை நிர்வகித்து வருவாய் ஈட்டும் உரிமையைப் பறித்து, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடம் குவிப்பது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் செயலாகும்.
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியை முடக்கும் இந்த மசோதாவை எதிர்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியையும் தமிழ்நாட்டின் வருவாய் ஆதாரங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனத் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.