ஒளிரும் தமிழகம்.. 50 மாவட்டங்கள், 20 தாலுக்காக்கள்... சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாநிலத்தின் நிர்வாக வசதிக்காகப் புதிய மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும். நிர்வாக வசதிக்காகவும், மக்களின் பயன்பாட்டிற்காகவும் புதிதாக 20 தாலுகாக்கள் உருவாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் 26 வகையான சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 100 நாட்களில் மட்டும் 39.26 லட்சம் பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு முடிந்து விண்ணப்பித்த உடனே 45 சதவீதம் பேருக்கு உடனடியாகப் பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது.
கடுமையான இடநெருக்கடியில் இயங்கி வரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பதிலாக, ரூ.83 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும். இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேரிடர் சூழல்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாட்டு விருந்தினர்கள் மற்றும் ஆய்வுக் குழுக்களுக்கான செலவினங்களை மாவட்ட நிர்வாகமே நேரடியாக ஏற்கும் வகையில் ரூ.6.85 கோடி ஒதுக்கப்படும்.