தமிழகமே அதிர்ச்சி... ஜாமீனில் எடுத்த தாயையே குத்திக் கொன்ற மகன்... 19 வயதில் கஞ்சா போதையில் வெறித்தனம்!

 

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில், கஞ்சா போதைக்கு அடிமையான 19 வயது வாலிபர் ஒருவர், தன்னை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்த பெற்ற தாயையே கொடூரமாகக் குத்திக்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா (42) என்பவரின் மகன் தேவராஜ் (19). கூலி வேலை செய்து வந்த இவர், தீவிர கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் சென்ற தேவராஜ், அங்கிருந்த காவலர் ஒருவரின் தொப்பியைப் பறித்து அணிந்துகொண்டு அட்ராசிட்டி செய்துள்ளார். இச்சம்பவத்திற்காக இண்டூர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகனின் எதிர்காலத்தைக் கருதி, தாய் சின்னபாப்பா பாடுபட்டுப் பணத்தைச் திரட்டி நேற்றைய தினம் (அக். 29) அவரை ஜாமீனில் வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வீட்டிற்கு வந்த மகனிடம், போதைப் பழக்கத்தைக் கைவிட்டுத் திருந்துமாறு தாய் சின்னபாப்பா புத்திமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தேவராஜ், கஞ்சா போதையில் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியை எடுத்துச் சின்னபாப்பாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இண்டூர் காவல் துறையினர், சின்னபாப்பாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற தேவராஜைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா போதையின் பிடியில் சிக்கி, தன்னை மீட்ட தாயையே மகனே பலிகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.