தமிழகமே அதிர்ச்சி... நிலத்தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கத்திக்குத்து; வழக்கை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டல்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியதோடு, அதனை வீடியோ எடுத்த கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் நடந்து நாட்களாகியும் குற்றவாளிகள் மீது காவல்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் மங்கம்மாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மங்கம்மாள் தனது நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களைச் அறுவடைக்குத் தயாரான நிலையில், நிலத்தகராறில் ஈடுபட்டு வரும் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் பயிர்களைச் சேதப்படுத்தி, நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மங்கம்மாள் குடும்பத்தினரை நோக்கி அந்தக் கும்பல் கடுமையான மிரட்டல்களையும் விடுத்துள்ளது.

அப்போது, அந்தக் கும்பல் தங்கள் குடும்பத்தினரை அச்சுறுத்தி அட்டூழியத்தில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மங்கம்மாளின் மகள் (கல்லூரி மாணவி), தனது பாதுகாப்பிற்காகவும், சாட்சிக்காகவும் தன் கையில் இருந்த செல்போன் மூலம் அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார்.

தங்கள் அராஜகத்தை அந்த மாணவி வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்தக் கும்பல் கடுமையான ஆத்திரமடைந்தது. உடனே மாணவியைச் சூழ்ந்து கொண்ட அவர்கள், கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதோடு நிறுத்தாமல், அந்த மாணவியைக் காட்டுமிராண்டித்தனமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

காயமடைந்த மாணவியை மீட்ட அவரது குடும்பத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இச்சம்பவம் குறித்துப் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டுப் பல நாட்களாகியும், இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளைப் பிடிக்காமல் காவல்துறையினர் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதால் தங்கள் குடும்பத்திற்குத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதாகவும், மாவட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.