வியட்நாம் படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு! 

 

வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே நிகழ்ந்த கோரப் படகு விபத்தில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபிரபு (44) என்ற செல்போன் விநியோகஸ்தர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனம் ஒன்று, தனது அசாத்திய வணிக இலக்குகளை எட்டியதற்காகத் தனது இந்திய அளவிலான விநியோகஸ்தர்களை உத்தியோகபூர்வச் சுற்றுலாவிற்காக வியட்நாமுக்கு அழைத்துச் சென்றிருந்தது. இச்சுற்றுலாவின் ஒரு பகுதியாக, ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்தியப் பயணிகள் பயணித்த விசைப்படகு கடல் சீற்றத்தில் சிக்கிக் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி நீரில் மூழ்கிய திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த செல்போன் விநியோகஸ்தர் முருகபிரபு (44) பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி பழனியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மூழ்கிய முருகபிரபுவின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் மேலும் 18 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும், கடுமையான பதற்றமும் நீடித்து வருகிறது. விபத்து நிகழ்ந்த பகுதியில் வியட்நாம் நாட்டின் கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட முருகபிரபுவின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான  வெளியுறவுத்துறை நடவடிக்கைகளை வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.