தமிழகத்தில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? டிஜிபிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

 

 

தமிழகத்தில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர், எத்தனை வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது என்பது குறித்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், தனது கணவர் சங்கர்ராஜை கண்டுபிடித்து மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சங்கர்ராஜை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க பல்வேறு மாநிலங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆட்கொணர்வு வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர்.

டிஜிபிக்கு 3 வாரம் கெடு

தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், இன்னும் எத்தனை பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எத்தனை வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது ஆகிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் அறிக்கையில் விளக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதற்காக 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.