தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை… 2 நாட்களில் 3,035 ரவுடிகள் கைது!
தமிழகம் முழுவதும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், இரண்டு நாட்களில் 3,035 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக போலீசார் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் 756 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 199 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, 341 ரவுடிகள் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.