தமிழக அரசியல் உச்சகட்டப் பரபரப்பு... கவர்னருடன் தலைமைச் செயலர், டிஜிபி சந்திப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பைக் கண்டுள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னர் அர்லேகரைச் சந்தித்து, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக அவர் கவர்னரிடம் உறுதி அளித்துள்ள நிலையில், கவர்னர் மாளிகையில் இன்று முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
விஜய்யுடனான சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கவர்னரை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்குத் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் கவர்னரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் தமிழகத்தில் புதிய அரசு அமைவதைக் கோடிட்டுக் காட்டுகின்றனவா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. குறிப்பாகப் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டமன்றம் ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள நிலையில், தவெக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிவதால் இந்த அதிகாரிகள் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படாமல் பதவியேற்பு விழாவை நடத்துவது மற்றும் புதிய அரசுக்கான நிர்வாக ஏற்பாடுகள் குறித்து கவர்னர் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகலாம் என்பதால் ஒட்டுமொத்த மாநிலமும் கவர்னர் மாளிகையை உற்று நோக்கி வருகிறது.