தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்!
தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்.30-ம் தேதி தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண பேருந்துகள் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், வெற்றி பயணம் திட்டத்தால் தனியார் பேருந்துகளின் வருவாய் பாதிக்கப்படலாம் என பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்காமல் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 24 மணி நேரம் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என நாமக்கல் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் செப்.30-ம் தேதி தனியார் பேருந்துகளை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த வேலைநிறுத்தத்தால் எந்தெந்த வழித்தடங்களில் எவ்வளவு அளவுக்கு சேவை பாதிக்கப்படும் என்பது அந்தந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்கத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
தனியார் பேருந்துகளில் இலவச பயணத்துக்கான மானியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேருந்து உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.