தேசியளவில் தமிழகம் முதலிடம்... அரசு மருத்துவமனைகளில் மலிவான சிகிச்சை!
தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான மிகக் குறைந்த மருத்துவச் செலவைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான சராசரி செலவு வெறும் ரூ.1,357 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரி செலவான ரூ.6,631யை விடப் பல மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் தடையின்றி வழங்கப்படுவதே இந்தச் சாதனைக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஏழை எளிய மக்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவழிக்காமல் உயர்தரச் சிகிச்சையைப் பெறுவதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் வலிமையாக இருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளன.
அதேசமயம், தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான செலவு தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சராசரி சிகிச்சை செலவு 74,168 ரூபாயாக உள்ளது; இது தேசிய சராசரியான 50,508 ரூபாயை விட அதிகம். இதனால் நடுத்தர மற்றும் கீழ்நிலை வருவாய் கொண்ட மக்கள், தங்களது மருத்துவத் தேவைகளுக்கு அதிகளவில் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் சூழல் நிலவி வருகிறது.