ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி... தமிழகத்தில் ஜனவரி முதல் அமல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்பங்களுக்கு விரைவில் மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசி வழங்கப்பட உள்ளது. இதற்கான புதிய தரக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
தற்போது ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் புழுங்கல் அரிசியில் அதிகபட்சம் 16 சதவீதமும், பச்சரிசியில் 25 சதவீதமும் உடைந்த அரிசி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இனி இந்த அளவு கணிசமாகக் குறைக்கப்பட உள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, புழுங்கல் அரிசியில் அதிகபட்சம் 5 சதவீதமும், பச்சரிசியில் 10 சதவீதமும் மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்திலும் இந்தத் தரக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.