பதிவுத்துறை அலுவலகம் செல்லாமலேயே ஆவணப்பதிவு! 44 நாட்களில் 1 லட்சம் ஆவணங்கள் பதிவு

 

 

தமிழக பதிவுத்துறையின் ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ நடைமுறைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் 44 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையவழியில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் வகையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆவணங்களை இணையவழியில் தாக்கல் செய்யும் வசதி இதில் உள்ளது.

மனைப்பிரிவில் முதல் விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் விற்பனை ஆகிய ஆவணங்களுக்கு இந்த ‘வருகையில்லா ஆவணப்பதிவு’ முறை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் ரசீது ஆவணங்களுக்கும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 44 நாட்களில் மொத்தம் 1,00,134 ஆவணங்கள் இந்த முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 5 லட்சம் பொதுமக்களின் அலைச்சல், கால விரயம் மற்றும் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை சமர்ப்பிக்கும் முன்பு இணையவழியில் வரைவு ஆவணத்தை சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும் வசதி உள்ளது. ஆதார் அடிப்படையிலான அங்கீகாரமும் இடம்பெறுகிறது. பதிவு முடிந்த பிறகு மின்னணு கையொப்பத்துடன் கூடிய ஆவணத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்தத் திட்டம் படிப்படியாக பிற வகையான ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களின் அடிப்படையில் மென்பொருளில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.