தமிழகத்தில் அதிகரிக்கும் ‘ஸ்க்ரப் டைபஸ்’... இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை பாருங்க!
சென்னை: தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் உண்ணி காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பருவமழை காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுடன் தற்போது ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பும் ஆங்காங்கே அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஸ்க்ரப் டைபஸ் என்பது ‘ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயாகும். புல், புதர் மற்றும் செடி கொடிகள் நிறைந்த பகுதிகளில் காணப்படும் சிறிய ஒட்டுண்ணி பூச்சிகளின் கடி மூலம் இந்த பாக்டீரியா மனிதர்களுக்கு பரவுகிறது.
இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடல்வலி, உடல் சோர்வு, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம். காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் அல்லது இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக மழைக்காலங்களில் புதர்கள், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உடலில் பூச்சிகள் ஒட்டாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த 20 வயது மாணவர் ஒருவர் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாணவருக்கு முதலில் அதிக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஸ்க்ரப் டைபஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு புதிதான ஒன்றல்ல. தமிழக பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளிலும் இந்த நோய் மாநிலத்தில் பரவலாக காணப்படுவது பதிவாகியுள்ளது.
எனவே, காய்ச்சல், உடல்வலி, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் சாதாரண காய்ச்சல் என அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், உரிய முன்னெச்சரிக்கை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.