தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பலகையில் இந்தி எழுத்துகள் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு!
தமிழக அரசு தீவிரமாகப் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கைக்கு மாறாக, மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, உடனடியாக அந்தி இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டதுடன், இதற்குப் பொறுப்பான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர்கள் அடங்கிய வழிகாட்டிப் பலகையில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் சேர்த்து, மூன்றாவது மொழியாக இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் அப் பலகையில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் தெளிவான இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே) அமலில் உள்ள நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை பலகையில் இந்தி நுழைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையேயும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து உடனடியாகத் தலையிட்ட நெடுஞ்சாலைத்துறையினர், அந்த வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகளை உடனடியாக அழித்து அகற்றினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது தீவிரத் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசு அலுவலர் மீதும் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்."
இவ்வாறு அந்த அரசாணையில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்பதில் அரசு காட்டி வரும் உறுதியான நிலைப்பாடு மற்றும் அலுவலர்களின் மீதான இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.