ஒரே டாஸ்மாக் கடையில் 3 ஆண்டுகள்தான் பணி...  ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றம்!

 

 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் புதிய இடமாற்ற நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரே கடையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாகப் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும், கடைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடைகளின் தூய்மைப் பணிக்காக மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை நிர்வாகம் வழங்கவும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சீருடைக்கான தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே கடையில் நீண்டகாலம் பணியாற்றுவதால் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிறுவன இயக்குநர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன