தமிழகத்தில் 2031-க்குள் 20,000 சார்ஜிங் நிலையங்கள்; புதிய துணை மின்மீட்டர், கட்டணச் சலுகைகளுடன் திட்டம்!

 

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும் தமிழக அரசு ஒரு உள்கட்டமைப்புத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி, வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி, ஒரு புதிய சார்ஜிங் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்குத் தனியாகப் பெரிய அளவிலான மின் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதனால் முதலீட்டுச் செலவு அதிகமாகிறது. இதற்குத் தீர்வாகத் தமிழக அரசு ஒரு புதிய கொள்கை முடிவை எடுக்கவுள்ளது.

தற்போதுள்ள மின் இணைப்புகளிலேயே, கூடுதல் மின் உள்கட்டமைப்புச் செலவுகள் ஏதுமின்றி, மின்சார வாகன சார்ஜிங் வசதிக்காக மட்டுமே தனியாகப் புதிய 'துணை மின்மீட்டர்' அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவின் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகக் குறைந்த முதலீட்டிலேயே தங்களது இடங்களில் இ.வி சார்ஜிங் வசதிகளை மிக எளிதாக அமைத்துவிட முடியும்.

மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்போருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையிலும், இத்தொழிலில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் தமிழக அரசின் உயர் மட்டக் குழு சில முக்கியப் பரிந்துரைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

சார்ஜிங் நிலையங்களுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள 'நிலைக்கட்டணம்' மற்றும் 'குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தில்' இருந்து முழுமையாக விலக்களிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முழு விலக்கு சாத்தியமில்லாத பட்சத்தில், இந்தக் கட்டணங்களைக் கணிசமாகக் குறைக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட உள்ளது. சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக மட்டுமே தனியாகப் புதிய மின் சேவை இணைப்பைப் பெற நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் இந்தச் சலுகைகள் மற்றும் மின்சார வாகனக் கொள்கைத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் மின்வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும். இது நுகர்வோருக்குச் சார்ஜிங் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் போக்கி, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையைப் பெருமளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.