தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் சுனில்குமார் மற்றும் தகவல் ஆணையர் அபய் குமார் சிங் திடீர் ராஜினாமா!

 

தமிழக அரசு நிர்வாகத்தில் அடுத்தடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட ஆணையங்களின் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வரும் சம்பவங்களின் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மாநிலத் தகவல் ஆணையர் ஆகியோர் தங்களது பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழக தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் மற்றும் அதன் உறுப்பினர்கள் நேற்று பதவி விலகிய பரபரப்பு அடங்குவதற்குள், இன்று மேலும் இரு முக்கிய உயர் அதிகாரிகள் பதவி விலகியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் மிக முக்கியப் பொறுப்பில் இவர் இருந்து வந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்து அண்மையில் பணி ஓய்வுபெற்று, தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தகவல் ஆணையராகப் பொறுப்பேற்றிருந்த அபய் குமார் சிங்கும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, நிர்வாக ரீதியாகப் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் வேளையில், முந்தைய காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட உயர்மட்டப் பொறுப்பாளர்களாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது, அதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை ஆணைய நிர்வாகிகள் விலகியது எனத் தொடர் அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கு இடையே இந்த ராஜினாமாக்களும் அரங்கேறியுள்ளன. தனிப்பட்ட மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ராஜினாமாக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், புதிய அரசு தங்களுக்கு உகந்த மற்றும் புதிய கொள்கைகளுக்கு ஏற்ற அதிகாரிகளை இத்தகைய உயர்மட்ட வாரியங்களில் நியமிக்கத் திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலியாக உள்ள இந்த மிக முக்கியப் பணியிடங்களுக்குத் தகுதியான புதிய அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக அரசு  தீவிரமாக ஈடுபட்டுள்ளது.