தமிழகத்தில் AI தொழில்நுட்பம் மூலம் சாலை விதிமீறலுக்கு அபராதம்... அடுத்த 6 மாதங்களில் முழுமையாக அமல்!
சென்னைப் பெருநகரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த புதிய அதிநவீன கண்காணிப்புத் திட்டத்தை கையில் எடுத்துள்ளன.
சென்னையின் முக்கியச் சாலை சந்திப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்களைப் பொறுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் 70 சதவீதம் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள 30 சதவீதப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்து, இன்னும் சரியாக 6 மாதங்களுக்குள் இத்திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்ப அமைப்பானது மனிதர்களின் குறுக்கீடு ஏதுமின்றி, சாலைகளில் நிகழும் விதிமீறல்களைத் தானியங்கி முறையில் நொடிப் பொழுதில் துல்லியமாகக் கண்டறியும் வல்லமை கொண்டது.
நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கோட்டைத் தாண்டிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வதையும் இந்த கேமராக்கள் துல்லியமாகப் படம் பிடிக்கும்.
இவற்றின் மூலம் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, அவர்களின் மொபைல் எண்களுக்குத் தானியங்கி முறையில் அபராதச் சலான் அனுப்பி வைக்கப்படும். வாகன ஓட்டிகள் தங்களின் அத்துமீறல்களுக்கான அபராதத் தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தற்போதிலிருந்தே சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகிறது.