இன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு டிசம்பர் 11 வரை அவகாசம்!

 

தமிழகத்தில் வருடாந்திர வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை முன்னிட்டு, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவம்பர் 12, வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை வெளியிடுகிறார். இதேபோல், சென்னையில் மாநகராட்சி ஆணையரும், இதர மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் வரைவுப் பட்டியலை வெளியிட உள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு (23.02.2026) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மார்ச் 15, 2026 நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2.78 கோடியும், பெண்கள் 2.90 கோடியும், மூன்றாம் பாலினத்தவர் 7,656 பேரும் அடங்குவர்.

01.01.2027 தேதியை வாக்காளராகத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த நவம்பர் 2-ஆம் தேதியே நிறைவடைந்து புதிய வாக்குச்சாவடி பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும், பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். நவம்பர் 12 முதல் டிசம்பர் 11, 2026 வரை உரிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீது டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்.

அனைத்துத் திருத்தங்களும் முடிக்கப்பட்டு, வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.