தமிழகம் முழுவதும் இ-சேவை இணையதளம் 2 நாட்களாக முடக்கம்; பொதுமக்கள், மாணவர்கள் அவதி!

 

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பல்வேறு முக்கிய அரசு ஆவணத் தேவைகளுக்கான முதன்மைத் தளமாக விளங்கும் அரசு 'இ-சேவை' இணையதளம், கடந்த இரண்டு நாட்களாகத் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக முடங்கியுள்ளது. இதனால் இ-சேவை மையங்களுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் இயங்கி வரும் இந்த இ-சேவை இணையதளம் மூலம் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளுக்குப் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 

கடந்த ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் இ-சேவை இணையதளம் (tnesevai.tn.gov.in) தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பக்கங்கள் சரிவர இயங்காமல் முழுமையாக முடங்கியுள்ளது. இணையதளம் செயல்படாததன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொதுச் சேவை மையங்களில் சான்றிதழ் வழங்கும் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

தற்போது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் பல்வேறு அரசுப் பணிகளுக்கான விண்ணப்பக் காலக் கெடு நெருங்கி வரும் சூழலில், இந்தத் திடீர் முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிச் சேர்க்கைக்காகச் சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களுக்கு அவசரமாக விண்ணப்பிக்க வந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டச் சேவைகளுக்காக வந்த பொதுமக்களும் இ-சேவை மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இணையதள முடக்கம் மற்றும் பொதுமக்களின் புகார்கள் குறித்துத் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தின் சர்வர் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், தரவுகளைப் பாதுகாப்பாகப் புதுப்பிப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட வழக்கமான பராமரிப்புப் பணிகளினாலேயே இந்தத் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள்  சரிசெய்யப்பட்டு வருவதாகவும்,  நாளைக்குள் இ-சேவை இணையதளம் மீண்டும் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.