தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி காலமானார்.. உயர் அதிகாரிகள் இரங்கல்!
தமிழ்நாடு காவல்துறையின் மிக முக்கிய அடையாளமும், தமிழகத்தின் 'முதல் பெண் காவலர்' என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றவருமான திருமதி. சிசிலி (82) அவர்கள், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். \
பெண் காவலர்களே இல்லாத ஒரு காலகட்டத்தில், காவல்துறையில் கால்பதித்து சாதனை படைத்த அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழக காவல் துறையினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1973-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டின் முதல் பெண் காவலர் குழுவில் சிசிலி அவர்கள் இணைந்தார். சட்டம்-ஒழுங்கு பிரிவில் மிகவும் திறம்படப் பணியாற்றிய அவர், பல்வேறு சவாலான வழக்குகளைத் துணிச்சலுடன் கையாண்டு 'காவல் ஆய்வாளராக' பதவி உயர்வு பெற்றார். சுமார் 32 ஆண்டுகள் தமிழக காவல்துறைக்குத் தூணாக விளங்கிய அவர், கடந்த 2005-ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து முறைப்படி ஓய்வு பெற்றார்.
தற்போது ஆயிரக்கணக்கான பெண் காவலர்கள் தமிழக காவல்துறையில் கம்பீரமாகப் வலம் வருவதற்குத் தொடக்கப்புள்ளியாகவும், பெண் சிங்கமாகவும் திகழ்ந்த சிசிலி அவர்களின் மறைவிற்கு உயர் போலீஸ் அதிகாரிகள், சக காவலர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தங்களின் இரங்கல்களையும், வீரவணக்கத்தையும் செலுத்தி வருகின்றனர்.