"தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடி" - வெள்ளை அறிக்கையில் புள்ளிவிவரங்களை வெளியிட்டார் நிதியமைச்சர்!

 

தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று மாலை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் நிதி மேலாண்மை முற்றிலும் சீர்குலைந்து, வரலாறு காணாத கடன் படுகுழியில் மாநிலம் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி பல்வேறு அதிரவைக்கும் புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டார்.

செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டுகளாக, கடந்த 60 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசுகளும் சேர்த்து வாங்கிய ஒட்டுமொத்த கடனின் அளவு வெறும் ரூ. 5 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டுமே கூடுதலாக ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு, கடன் சுமை மிகக் குறுகிய காலத்தில் அப்படியே இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மறைக்கப்பட்ட கணக்குகள் அனைத்தையும் சேர்த்து தமிழ்நாட்டின் உண்மையான ஒட்டுமொத்த கடன் அளவு ரூ. 13.18 லட்சம் கோடி என்ற விஸ்வரூப எல்லையை எட்டியுள்ளது.

மாநிலத்தின் அன்றாட நிதிப் பற்றாக்குறை குறித்து அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது ரூ. 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிக மோசமான உச்ச அளவாகும். உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்த வருவாய் பற்றாக்குறையை விட, தற்போதைய பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்பொழுது தேசிய சராசரிக்கும் கீழே சரிந்து பொதுப் பொருளாதார வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாநிலத்தின் இந்த நிதி நெருக்கடி குறித்து அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், "முந்தைய திமுக அரசு, வாங்கிய கடன்களைக் கொண்டு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களையோ அல்லது மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் மூலதன உருவாக்கத்தையோ செய்யவில்லை. மாறாக, தமிழக அரசின் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் வழக்கமான செலவுகளைச் சமாளிப்பதற்கே ஒட்டுமொத்தமாகக் கடன் வாங்கும் அவல நிலைக்கு மாநிலத்தைத் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்."

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இந்த ரூ. 13.18 லட்சம் கோடி கடன் சுமையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் கடுமையான நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு, தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.