அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்... இன்று சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்!

 

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

சமீபத்தில் ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட சில பொது நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டிற்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையின் வெளிப்பாடாகத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதை அரசு உறுதியாக முன்வைக்கிறது.

மாநிலத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் பொது அமைப்புகளின் அரசு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் முதன்மையாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய இத்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இத்தனித்தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ள நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.