"புறவாசல் வழியாக அமைச்சரான காங்கிரஸ்" - தமிழிசை சவுந்தரராஜன்!

 

கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மையக்குழு கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், அண்மைய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் புதிய தவெக அரசு, காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

"தேர்தல் களத்தில் எந்த தீய சக்தியை எதிர்த்துப் போராடுகிறோம் என்று கூறினார்களோ, அதே தீய சக்தியோடு இருந்தவர்களுடன் சேர்ந்து தற்பொழுது ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி இன்று புறவாசல் வழியாகத் தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது.

காங்கிரஸ் பல மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்ட, ஊழல் மலிந்த, மக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்யாத ஒரு கட்சி. அப்படிப்பட்ட காங்கிரஸை அரவணைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று கூறும் தமிழக வெற்றிக் கழகம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதை மக்கள் உற்று நோக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்குள் சிக்கித் தவெக பலியாகிவிடக் கூடாது. தவெக தங்களின் தனித்தன்மையை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்."

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சித்த ராகுல் காந்திக்கு அதுகுறித்த புரிதல் இல்லை என்று தமிழிசை சாடியுள்ளார். "பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியைப் போல வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில்லை. அவரது ஒவ்வொரு பயணத்தின் பின்னாலும் மக்கள் நலனும், தேச நலனும் கலந்த திட்டங்கள் இருக்கின்றன.

பிரதமரின் அரபு நாட்டுப் பயணங்கள் நாட்டின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவின் பெட்ரோல் இருப்பைச் சேமித்து வைப்பதற்காகவுமே அமைந்தன. அதேபோல் நெதர்லாந்து சென்ற பிரதமர், 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புத் தகடுகளைத் தமிழ் உணர்வோடு மீட்டு வருகிறார்." மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை மற்றும் திட்டங்கள் குறித்துப் புதிய அமைச்சரவைக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 "இளைஞர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு தேசபக்தி பாடலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 'நாங்கள் இதைப் பின்பற்ற மாட்டோம்' என்று தமிழக அமைச்சர்கள் பொத்தாம் பொதுவாகக் கருத்துச் சொல்ல முடியாது. இவை நாட்டுக்கான வழிமுறைகள், அதை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

கடந்த கால ஆட்சியைப் போல மத்திய அரசுடன் தேவையில்லாத கொள்கை மோதல்களில் ஈடுபடக் கூடாது. புதிய கல்வி அமைச்சர், மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' போன்ற சிறந்த திட்டங்களைத் தங்களின் கொள்கை முடிவுக்கு எதிரானது எனக் கூறிப் பொத்தாம் பொதுவாக நிராகரிக்கக் கூடாது.

திமுக ஆட்சியில் இருந்தது போலச் சனாதனம், வந்தே மாதரம் ஆகியவற்றை வைத்து உணர்ச்சிப்பூர்வமான அரசியல் செய்யாமல், தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் ஆக்கப்பூர்வமான மக்கள் நல அரசியலை நோக்கிச் செல்ல முதலமைச்சர் விஜய் முறையாக வழிகாட்ட வேண்டும்" என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.