இந்து சமய அறநிலையத் துறையில்   2 புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் ... தமிழ்நாடு அரசு உடனடி உத்தரவு!

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக 2 புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணியிடங்களை உருவாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொதுமக்களின் சேவைகளைத் துரிதப்படுத்தவும், திருக்கோவில்களின் நிர்வாகத்தை சீராகக் கண்காணிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய உத்தரவு அறநிலையத் துறை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய நிர்வாக அமைப்பின்படி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்கள் இரு முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளன. வட மாவட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சென்னை மண்டலமாகவும், தென் மாவட்டங்களை உள்ளடக்கித் திருச்சி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு மண்டலங்களும் தலா ஒரு கூடுதல் ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டலப் பிரிப்பு மூலம் கோவில் தொடர்பான நிர்வாகப் பணிகளை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும் எனக் கருதப்படுகிறது.

 புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள இரு மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்தில் உள்ள கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் திருக்கோவில்களின் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடத்தப்படும். அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பால் நிர்வாகச் சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்பட்டுச் செயல்பாடுகள் வேகமெடுக்கும் எனக் கருதப்படுகிறது.