மனமகிழ் மன்றங்களுக்குக் கிடுக்கிப்பிடி... சிறப்புக் கட்டணம் இருமடங்காக உயர்வு!

 

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் எஃப்எல்-2 வகை மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி இத்தகைய புதிய மன்றங்களைத் தொடங்குவதற்கு முன்பாக செலுத்த வேண்டிய சிறப்புக் கட்டணம் இதுவரை ரூபாய் 15 லட்சமாக இருந்து வந்தது. இதனை இப்போது ரூபாய் 30 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 10,000 ஆகவும், அதற்கான உரிமக் கட்டணம் ரூபாய் 30,000 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகையின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளுக்குத் தனித்தனியாகக் கட்டண விகிதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிப் பகுதிகளில் இந்தக் கட்டணம் ரூபாய் 25 லட்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மாநிலத்தின் நகராட்சிப் பகுதிகளில் புதிய மன்றங்களைத் தொடங்க ரூபாய் 15 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கு ரூபாய் 20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு காரணமாகப் பொழுதுபோக்கு மன்றங்களைத் தொடங்க திட்டமிட்டிருந்தவர்களிடையே பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.