பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்... தமிழக அரசு அரசாணை!
தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் தொடர்பாகத் தமிழக அரசு புதிய மற்றும் முக்கியமான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி முக்கிய அதிகாரிகளின் தற்காலிக மற்றும் நிரந்தரப் பதவி உயர்வுப் பட்டியல்கள் அனைத்தும் இனி நேரடியாக முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகளின் கீழ் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட முந்தைய ஆணைகள் மற்றும் நடைமுறைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களின் பதவிகளுக்கான நியமனங்கள் இந்த புதிய உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவி உயர்வுப் பட்டியல்களுக்கும் இனி அரசின் முறையான ஒப்புதல் பெறப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநிலப் பணியாளர் பதவி உயர்வு விவகாரங்களில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சர்களின் அதிகார வரம்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையிலும் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்களைத் தலைமைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.