சண்டிகருக்கு முதல் இடம்...  பள்ளிக் கல்வி தரவரிசை பட்டியலில் தமிழகத்திற்கு 7 வது இடம்...!  

 

 

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பள்ளி கல்வி வளர்ச்சி குறியீடு எப்படி உள்ளது என்பது குறித்த ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-2026-ம் ஆண்டுக்கான பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டு தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக பள்ளி கல்வியின் வளர்ச்சியானது அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது.

2025-2026-ம் ஆண்டிற்கான பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டு தரவரிசையில் சண்டிகர் முதல் இடம் பிடித்துள்ளது. கேரளாவுக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்துள்ளது. அத்துடன், முறையே மூன்றாவது இடத்தை புதுச்சேரியும், நான்காவது இடத்தை கோவாவும் பிடித்துள்ளன. மேலும் ஐந்தாவது இடத்தை தலைநகர் டெல்லியும், ஆறாவது இடத்தை பஞ்சாபும் தங்களுக்குள் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு ஏழாவது இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த முறையைவிட தனது மதிப்பெண்ணை 0.018 அதிகரித்தாலும், ஏழாவது இடத்தையே தமிழ்நாட்டால் தக்கவைக்க முடிந்தது. எட்டாவது இடத்தை அந்தமான் நிகோபார் தீவும், ஒன்பதாவது இடத்தை லட்சத்தீவும், பத்தாவது இடத்தை அரியானாவும் பிடித்துள்ளன.