ஓட்டுப் போட சிங்கப்பூர், துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தமிழர்கள்! ஜனநாயக கடமையில் அசத்தும் என்.ஆர்.ஐ-க்கள்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடல் தாண்டி வாழும் தமிழர்கள் காட்டிய ஆர்வம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "என் மண்ணின் தலைவனை நானே தேர்ந்தெடுப்பேன்" என்ற உறுதியோடு, சிங்கப்பூரில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறப்பு விமானம் மற்றும் வழக்கமான விமானங்கள் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது நேற்று இரவு முதலே திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுத் தமிழர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள், தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தித் தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். "வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தாலும், எங்கள் ஊரின் வளர்ச்சிக்கு வாக்களிப்பது எங்கள் கடமை" என விமான நிலையத்தில் இறங்கிய பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இவர்களை வரவேற்க உறவினர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்ததால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள வாக்காளர்களின் வசதிக்காக திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லக் கூடுதல் வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சிங்கப்பூர் மட்டுமின்றி துபாய், குவைத் போன்ற நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு வாக்களிக்கத் தமிழர்கள் வந்துள்ளனர். காசு கொடுத்து ஓட்டு வாங்கும் சூழலுக்கு மத்தியில், சொந்தப் பணத்தைச் செலவு செய்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வாக்களிக்க வந்த இந்தத் தமிழர்களின் செயல், உள்நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.