கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு - உறவினர்கள் போராட்டம் வாபஸ்!

 

கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அரசு அளித்த உறுதியைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு உடல்களைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்களும், அப்பகுதி மக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அரசு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அளிக்கப்பட்ட இந்த உறுதிகளைத் தொடர்ந்து, கிராம மக்களும் உறவினர்களும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரின் உடல்களையும் பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்யக் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.