பழைய திட்டங்களுக்கு பெயிண்ட் அடித்துள்ளார்கள் - தமிமுன் அன்சாரி
தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை ஒரு வெறும் 'அலங்கார பட்ஜெட்' என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி சாடியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையே தவெக அரசு மீண்டும் பெயர் மாற்றி, புதிய பெயிண்ட் அடித்துத் தனது சொந்தத் திட்டம் போலக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் தொலைநோக்குப் பார்வையோ, பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான புதிய திட்டங்களோ எதுவும் இல்லாத வெறும் வார்த்தை அலங்காரமாக மட்டுமே உள்ளது எனத் தெரிவித்தார்.
சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்த போதிலும், பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவரை நேரலையில் காண்பிக்காமல் கேமராவைத் திசைதிருப்பி இருட்டடிப்பு செய்துள்ளதாகக் காரசாரமாகச் சாடினார்.
எதிர்க்கட்சிகளின் குரலை மக்களுக்குச் சென்றடைய விடாமல் தடுப்பது ஜனநாயகப் பண்புகளுக்கு முற்றிலும் எதிரானது எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.