மேகதாது வேண்டாம், ராசிமணல் திட்டம் வேண்டும் - சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பேச்சு!

 

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மேகதாது திட்டத்திற்கு மாற்றாக 'ராசிமணல் அணை திட்டத்தை' செயல்படுத்த வேண்டும் என்ற மிக முக்கியக் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

அரசின் தனித்தீர்மானத்தை முழுமையாக ஆதரித்துப் பேசிய தமிமுன் அன்சாரி, காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குமான நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசினார்.

சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய தமிமுன் அன்சாரி, "மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டும்பல்ல, கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழல் ரீதியாகப் பெரிய பாதிப்புகள் ஏற்படும். இந்த பிடிவாத போக்கை விடுத்து, இரு மாநில மக்களுக்கும் பயன் தரும் மாற்று வழிகளை நாம் சிந்திக்க வேண்டும்."

மேகதாதுவிற்கு மாற்றாகப் பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்குத் திட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில், தமிழக-கர்நாடக எல்லையான தருமபுரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் இரு மாநிலங்களும் இணைந்து கூட்டு நீர்மின் திட்டம் மற்றும் அணை கட்டத் திட்டமிடப்பட்டது.

மேகதாது திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, காமராஜர் கொண்டு வர நினைத்த இந்த ராசிமணல் அணை திட்டத்தை இரு மாநில அரசுகளும் இணைந்து கூட்டுத் திட்டமாகத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரம் மற்றும் உபரி நீர் தடையின்றிக் கிடைக்கும். இது இரு மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே உள்ள தண்ணீர் பகையை மாற்றிப் பெரும் பயனளிக்கும்.

பெருந்தலைவர் காமராஜரின் இந்த உன்னதமான திட்டத்தை தற்போதைய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தமிமுன் அன்சாரி, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த அரசுத் தீர்மானத்திற்குத் தனது கட்சியின் சார்பில் முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.