தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: நாளை கோலாகலமாக வலம் வரும் 50 அடி உயர தேர்!
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய கோவில் தேரோட்டம் நாளை ஏப்ரல் 27-ந்தேதி திங்கள்கிழமை அதிகாலை நடைபெறுகிறது.
சுமார் 50 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான தேர் அலங்கரிக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி தஞ்சாவூரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வரும். இந்த தேரில் தியாகராஜர் மற்றும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுக்க காத்திருக்கின்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நான்கு வீதிகளிலும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கவனித்து வருகின்றனர்.