தான்சானியா அதிபர் தேர்தல் முடிவு வெளியானது... 97% ஓட்டுகளுடன் சமியா வெற்றி... எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
தான்சானியா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சமியா சுலுஹு ஹசன் 97.66 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த வெற்றி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாட்டான தான்சானியாவில் அக்டோபர் 29 அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான *சி.சி.எம். (சமா சா மாபிந்துசி)* சார்பில் போட்டியிட்ட சமியா சுலுஹு ஹசன், பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக, முக்கிய எதிர்க்கட்சிகளான சாடேமா மற்றும் வஸலெண்டோ ஆகியவை தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டி முடிவுகளை நிராகரித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, சாடேமா தலைவர் துண்டு லிசு மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதால் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல், வஸலெண்டோ கட்சியின் வேட்பாளர் லுஹாகா எம்பினாவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், 16 சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை மட்டுமே எதிர்கொண்டு, அதிபர் ஹசன் சவாலற்ற வெற்றியை பெற்றதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
மேலும், 97 சதவீத ஓட்டுகள் என்பது ஆப்ரிக்க அரசியல் வரலாற்றில் அரிதானது எனவும், இது தேர்தல் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
1961ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் தான்சானியாவில் சி.சி.எம். கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் சமியா சுலுஹு ஹசன் விரைவில் பதவியேற்பார் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!