“டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள்! ஒரு மாதத்தில் புதிய டெண்டர் - அமைச்சர் விக்னேஷ்”
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதற்கான புதிய டாஸ்மாக் பார் டெண்டர் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் பார்களின் செயல்பாடுகள் தொடர்பாக புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.
டாஸ்மாக் பார்களில் தற்போது தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், புதிய டெண்டரில் பார்களுடன் உணவகங்களையும் நடத்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.இதன் மூலம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் பார் டெண்டர் சுமார் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளின்படி பார்களில் உணவக வசதிகள் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு டாஸ்மாக் பார்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.