கடனாக மதுபானம் கேட்டு டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் - போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

 

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் கடனாக மதுபாட்டில் தராததால், கடைக்குள் புகுந்து விற்பனையாளரைச் சரமாரியாகத் தாக்கிய காவலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து  உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாக்க வேண்டிய காவலரே, மதுபானத்திற்காகச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. கடந்த 15ஆம் தேதி இரவு, இந்தப் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் செந்தில்குமார் என்பவர் குப்பநத்தம் டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்குப் பணியில் இருந்த கடை விற்பனையாளர் சங்கர் என்பவரிடம், தனக்குக் கடனாக மதுபாட்டில்களைத் தருமாறு போலீஸ்காரர் செந்தில்குமார் கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் சங்கர், "பணம் தராமல் கடனாக மதுபானம் வழங்க முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

விற்பனையாளர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் செந்தில்குமார், தனது அதிகாரத் தோரணையில் கடை ஊழியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென டாஸ்மாக் கடைக்குள் புகுந்த செந்தில்குமார், விற்பனையாளர் சங்கரை ஓட ஓட விரட்டிச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட விற்பனையாளர் சங்கர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் உயர் அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் செந்தில்குமார் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கியது குறித்துத் துறை ரீதியான தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் காவலர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும், காவல்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியரைத் தாக்கிய புதுப்பாளையம் விபத்து உதவிப் பிரிவு போலீஸ்காரர் செந்தில்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.