தன்னிச்சையான 25% ஊதிய உயர்வு - தவெக அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கண்டனம்!
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) ஊழியர்களுக்குத் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு 25 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ள நிலையில், தங்களோடு உரியப் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் மாதம் முதல் 25% ஊதிய உயர்வு மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இ.எஸ்.ஐ மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதன் மூலம் உதவி விற்பனையாளர்கள் ஊதியம் ₹14,340-இல் இருந்து ₹17,925 ஆக உயரும். விற்பனையாளர்கள் ஊதியம் ₹15,530-இல் இருந்து ₹19,413 ஆக உயரும். மேற்பார்வையாளர்கள் ஊதியம் ₹17,850-இல் இருந்து ₹22,313 ஆக உயரும். இந்த ஊதிய மாற்றத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ₹110.74 கோடி செலவினம் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசின் இந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதற்குப் பதிலாக, டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் ஏன் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது என்பது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது: தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து முறையான பேச்சுவார்த்தை நடத்தாமல், தங்களுக்குள் ஒரு தொகையைத் தீர்மானித்து தன்னிச்சையாக இந்த 25% உயர்வை அரசு அறிவித்துள்ளது.
மற்ற அரசுத் துறை நிறுவனங்களில் 23 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவருக்குப் பணி மூப்பு அடிப்படையில் உரிய பதவி உயர்வுகளும், காலமுறை ஊதியமும், இதர பணப்பயன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிபவர்களையும் இன்னமும் தற்காலிகத் தொகுப்பூதியப் பணியாளர்களாகவே நடத்தும் 'நவீன கொத்தடிமை முறை'யைத் தற்போதைய தவெக அரசும் தொடர்வது ஏற்புடையதல்ல.
தங்களுக்குத் தேவை காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணி நியமனமே தவிர, இதுபோன்ற சதவீத அடிப்படையிலான கண்துடைப்பு உயர்வுகள் அல்ல என்று சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம், இந்த ஊதிய உயர்வை அறிவித்த கையோடு சில்லறை விற்பனைக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வாங்கும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்பவர்கள் உடனடியாகப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
அரசின் இந்த நிபந்தனைகளும், தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றாத போக்கும் டாஸ்மாக் ஊழியர்களிடையே தற்பொழுது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.