டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - குமரியில் பூட்டை உடைத்து மது விற்பனை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து 2-வது நாளாகக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தியதால், அதிகாரிகளே முன்னின்று கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனையைத் தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கையில் உள்ள குளறுபடிகளால் தங்களுக்குப் பண இழப்பு ஏற்படுவதாகக் கூறி, குமரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஸ்டிக்கர் விநியோகம் மற்றும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாவியைத் தர முடியாது என்பதில் ஊழியர்கள் உறுதியாக இருந்தனர். ஊழியர்கள் சாவியைத் தர மறுத்ததால், தோவாளை தாசில்தார் சிவகலா உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆரல்வாய்மொழி குமாரபுரம் உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு மது விற்பனை தொடங்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தொழிற்சங்கக் கூட்டுக்குழுவினருடன் அதிகாரிகள் நடத்திய இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், 1 மாதத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.